search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிபி டிகே ராஜேந்திரன்"

    பணி நீட்டிப்புக்கு எதிரான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரன் செயல்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. #HCMaduraiBench #DGP #TKRajendran
    மதுரை:

    மதுரை மீனாம்பாள் புரத்தைச் சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

    குட்கா ஊழலில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த டி.கே. ராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போதைய டி.ஜி.பி. அசோக்குமாருக்கு வருமான வரித்துறையினர் பரிந்துரை கடிதம் அளித்துள்ளனர்.

    பின்னர் டி.கே. ராஜேந்திரன் தமிழக டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவரை டி.ஜி.பி. பதவியில் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து கடந்த 30.6.2017 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

    வழக்கு விசாரணையின்போது, டி.கே. ராஜேந்திரனுக்கு குட்கா ஊழலில் உள்ள தொடர்பு பற்றி வருமான வரித்துறையினர் அளித்த அறிக்கை மாயமாகி விட்டது என்று அப்போதைய தமிழக தலைமை செயலாளர் ராம மோகனராவ் மதுரை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சசிகலாவின் அறையில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


    அதில் குட்கா ஊழலில் டி.கே. ராஜேந்திரனுக்கு தொடர்பு இருந்தது குறித்து வருமான வரித்துறையினர் அனுப்பிய கடிதங்கள் சிக்கி உள்ளன. அரசு அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த தகவல் பரிமாற்றம், எந்தவித சம்பந்தமும் இல்லாத சசிகலாவின் அறைக்கு சென்றது எப்படி? டி.கே. ராஜேந்திரனை டி.ஜி.பி. பதவியில் நீட்டிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அவருக்கு எதிரான ஆவணங்கள் மறைக்கப்பட்டு உள்ளன. பதவி நீட்டிப்பு விவகாரத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது.

    குடிமைப்பணிகள் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான விதிமுறைகள், டி.கே.ராஜேந்திரன் வி‌ஷயத்தில் மீறப்பட்டு உள்ளன.

    எனவே டி.கே.ராஜேந்திரனை தமிழக டி.ஜி.பி.யாக பணி நீட்டிப்பு செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று உத்தரவிட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு குழு ஏற்படுத்திட வேண்டும். இந்தக்குழு நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்திடவும் உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு போலீஸ் சட்டவிதிகள் 2013-ன் படி புதிய டி.ஜி.பி.யை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு கடந்த மாதம் 20-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

    முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் தலைமை செயலகம், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ், வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கும், கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பின்னர் இந்த வழக்கை ஜனவரி 2-ம் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பணி நீட்டிப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

    மேலும் இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு சென்று சேரவில்லை என தெரிகிறது. எனவே மீண்டும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.  #HCMaduraiBench
    ×